பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிற்கு இந்தியா ஐ.நா. மூலம் அழுத்தம் தர வேண்டும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று, ஐ.நா. பாதுகாப்பு அவையை அணுகுவதன் மூலம் சர்வதேச நாடுகளுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
இது குறித்துத் தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் பேச்சாளர் ரவி சங்கர் பிரசாத், "ஐ.நா. தீர்மானத்தின்படி எல்லா நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும். இந்தச் சர்வதேச உறுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற முடியாது. எனவே பாகிஸ்தானிற்கு ஐ.நா. மூலம் இந்தியா அழுத்தம் தர வேண்டும்" என்றார்.
பாகிஸ்தானிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பா.ஜ.க. ஆதரிக்கிறதா என்று கேட்டதற்கு, நேரடியாகப் பதலிளிக்க மறுத்த அவர், "ஐ.நா. பாதுகாப்பு அவைத் தீர்மானமே இந்தியாவிற்குக் கிடைத்துள்ள ராஜ்யரீதியான ஆயுதம்தான்" என்று கூறினார்.