மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் அல் காய்டா இயக்கத்திற்குத் தொடர்பிருக்கலாம் என்பதை மறுக்கவில்லை என்று கூறியுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், இதுபோன்ற தாக்குதல்களை அந்த இயக்கம்தான் நடத்த முடியும் என்றார்.
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா வந்துள்ள காண்டலீசா ரைஸ், தலைநகர் புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அல் காய்டா இயக்கத்திற்கு உள்ள தொடர்பு நேரடியானதா அல்லது மறைமுகமானதா என்பதைக் கூறுவது கடினம். ஆனால் தொடர்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றார்.
அல் காய்டாதான் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தும். ஆனால், மும்பையில் தாக்குதல் நடத்தியது அல் காய்டாதான் என்ற இறுதி முடிவிற்கு நாம் செல்ல முடியாது என்றார் காண்டலீசா ரைஸ்.
பயங்கரவாதத்திற்கு எதிராகச் சர்வதேச நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்திய அவர், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிப்படையாகவும் அவசரம் கருதியும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்றார்.