ஹைதராபாத்தில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ஒருவர் காவலர்களைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடியதால் பதற்றம் நிலவுகிறது. இதில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சந்தோஷ் நகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் விகார் அகமது என்பவர் கைது செய்யப்பட்டான். மேலும் சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்துக் காவல் நிலையத்திற்குத் திரும்பியபோது விகார் அகமது திடீரெனத் தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் காவலர்களைச் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டார். இதில் குரு ராமராஜூ, முகமது ஜாஃபர் ஆகிய இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.
அடிவயிற்றில் குண்டுக் காயம் அடைந்துள்ள குரு ராமராஜூவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஹைதராபாத் மாநகரக் காவல்துறை ஆணையர் பி. பிரசாத் ராவ் தெரிவித்தார்.
காவலர்கள் செல்லும்போது நாட்டுத் துப்பாக்கி, ஸ்கூட்டர் ஆகியவற்றுடன் இருந்த விகார் அகமது மூன்று சுற்றுக்கள் சுட்டுள்ளதாகவும், அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் பிரசாத் ராவ் கூறினார். விகார் அகமவுடன் மூன்று அல்லது நான்கு பேர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தராஸ்காஹ்- இ- ஜிஹாத்- ஓ- ஷஹாதத் என்ற அடிப்படைவாத அமைப்பைடச சேர்ந்த விகார் அகமது கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வருகிறார். அவருக்கு இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன் (சிமி) தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.