மும்பையில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வீட்டிற்கு 'நாய் கூடப் போகாது' என்று கூறியதற்காக கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் சட்டப் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.
மும்பை நாரிமேன் குடியிருப்பில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் கேரளத்தைச் சேர்ந்த தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் கொல்லப்பட்டார். பெங்களூரில் உள்ள இவரது வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, கேரள முதல்வர் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தனது அமைச்சர் ஒருவருடன் மேஜர் சந்தீப்பிற்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றார். அப்போது தாளாத துக்கத்தில் இருந்த மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், கேரள முதல்வர் தனது வீட்டில் இருந்து வெளியேறவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகின.
இதனால் ஆத்திரமடைந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், "உன்னிகிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதர். அவரது மகன் சந்தீப் தேசத்திற்காகப் போராடி இறந்துள்ளார். அவருக்காகத்தான் நான் வந்தேன். இல்லை என்றால் இந்த வீட்டிற்கு ஒரு நாய் கூட வராது. ஒருவேளை இரண்டு முதல்வரும் சேர்ந்து வரவேண்டும் என்று உன்னிகிருஷ்ணன் நினைத்தாரோ என்னவோ?" என்றார்.
முதல்வரின் இந்தப் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அச்சுதானந்தன் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் உடனடியாக வருத்தம் தெரிவித்ததுடன், அச்சுதானந்தனையும் வருத்தம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இன்று கேரளச் சட்டப் பேரவையில் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் பதவிவிலக வேண்டும் என்றும், அவர் தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து தனது சகாக்களுடன் கலந்து ஆலோசித்த பின்பு தனது பேச்சிற்கு முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் வருத்தம் தெரிவித்தார்.