மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸிடம் காண்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை இந்தியாவுக்கு வந்த காண்டலீசா ரைஸ், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை சந்திக்கிறார். அதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் மும்பை தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்கிடையில், இச்சந்திப்புகளின் போது, மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதை வெளிப்படுத்தும், பயங்கரவாதிகள் பேசிய செயற்கைக்கோள் தொலைபேசி உரையாடல்களையும் காண்டலீசாவிடம் காண்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியையும் சந்திக்க காண்டலீசா திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.