மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 180 பேர் கொல்லப்பட்டுள்ளது தொடர்பாக அமெரிக்காவின் உள் புலனாய்வுத் துறையினர் (Federal Bureau of Investigation (FBI)) வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ள லஸ்கர்- இ தயீபா இயக்கப் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள தங்கள் தலைமைக்குப் பேசப் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசிகளின் குறியீடுகளை உடைத்து, பேச்சு விவரங்களைக் கண்டறிவதில் அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்காடலாந்து யார்ட் அதிகாரிகளுடன் மும்பைக்கு வந்த 9 பேர் கொண்ட அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தகவல் சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர், பயங்கரவாதிகளின் செயற்கைக்கோள் தொலைபேசி உரையாடல்களை மறித்து நமது புலனாய்வு அமைப்பினர் பதிவு செய்துள்ள ரகசியத் தகவல்களை ஆய்வு செய்தனர்.
மேலும், நவம்பர் 26 அன்று கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முகமது அஜ்மல் அமீர் இமானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விவரங்களையும் அவர்கள் கேட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலோ அயல்நாட்டிலோ அமெரிக்கர் யாராவது கொல்லப்பட்டால் அதுபற்றி அமெரிக்க உள் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தலாம் என்பதன் அடிப்படையில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் மும்பை வந்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.