மும்பையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களால் இந்தியாவிற்கு வரும் அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று சுற்றுலா அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
தலைநகர் புது டெல்லியில் இன்று நடந்த ஆசிய பிராந்திய கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தியாவிற்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கும். ஆனால் அதைத் தடுப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது." என்றார்.
இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களால் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படும் காயங்கள் மிகவும் ஆழமானது என்று குறிப்பிட்ட அவர், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றார்.
ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்!
பின்னர் அவர், ஆசிய பிராந்திய கூட்டுறவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், புராதன சின்னங்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்றார்.
புராதன சின்னங்கள் கல்வி, சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளுடன் இணைந்துள்ளதால் இதன் வலுவான இணைப்பை நாம் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
தனிப்பட்ட நாடு அல்லது சமூகத்திற்கு மட்டுமல்லாமல் புராதன சின்னங்கள் உலகம் முழுமைக்கும் உள்ள சமுதாயத்திற்கு சொந்தமானவை என்று கூறிய அவர், புராதன சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள சமூகத்தின் ஒத்துழைப்பு மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றார்.