நமது நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டுப் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, மும்பையில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த சில சக்திகள்தான் காரணம் என்று மீண்டும் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக்கிடம் அயலுறவு அமைச்சகம் அளித்துள்ள, நமது நாட்டில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டுப் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளின் விவரங்கள், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றிற்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம், லஸ்கர்- இ தயீபா இயக்கத் தலைவர் ஹஃபீஸ் மொஹம்மது, ஜெய்ஸ் -இ முகமது இயக்கத் தலைவர் மசூத் அசார் ஆகியோர் உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்து உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவர்கள் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள் என்றார் பிரணாப் முகர்ஜி.
மேலும், "நாம் அளித்துள்ள பட்டியலில் 20 குற்றவாளிகளின் விவரங்கள் உள்ளன. இந்தப் பட்டியல் மாறக் கூடியது என்பதால், அது சரிபார்க்கப்பட்டுத் தேவையான விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன." என்றார் அவர்.
முன்னதாக, நேற்று இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் அயலுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார். அவரிடம் மும்பைத் தாக்குதல் தொடர்பான விவரங்களை அளித்தது மட்டுமின்றி, இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத்தத் தாக்குதல்களில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், மசூத் அசார் ஆகியோரை ஒப்படைக்குமாறும் அரசு வலியுறுத்தியது.