அஸ்ஸாமில் ரயிலில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் குவகாத்தி- தினுஷ்கா இடையே பயணிகள் ரயில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. திம்பு ரயில் நிலையத்திற்கு 8.10 மணிக்கு வந்த ரயில், புறப்பட்டு செல்ல சில நிமிடங்களுக்கு முன்பு ரயிலின் 3-வது பெட்டியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் ரயில்வே மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு இன்னமும் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் கர்பி பழங்குடி இனத்தைச் சேர்ந்த கர்பிலோங்ரி தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் அக்டோபர் 30 ஆம் தேதி அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 89 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.