கோத்ரா கலவர வழக்கை மீண்டும் விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலர் உள்பட 7 பேரைக் கைது செய்துள்ளனர்.
கோத்ரா ரயில் எரிப்பிற்குப் பின்னர் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.ராகவன் தலைமையில், உத்தரப்பிரதேச காவல்துறையின் முன்னாள் தலைவர் சி.டி.சத்பதி, குஜராத்தைச் சேர்ந்த கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆசிஷ் பாட்டியா ஆகிய 3 இ.கா.ப. அதிகாரிகள் ஆகிய 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழுவினர் கடந்த 2 வாரங்களாக நரோடா காம், குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா ஆகிய இடங்களில் நடந்த கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் இதுவரை நரோடாவைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் அசோக் பட்டேல், பா.ஜ.க. இளைஞர் அணியைச் சேர்ந்த ஜீதீந்திர மோடி, பியூலா வியாஸ், அரவிந்த் பட்டேல், கனு வியாஸ், விபுல் பரிக், முகேஷ் பிரஜாபதி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் மீது தீயிடல், கலவரங்களில் ஈடுபடுதல், கொலை செய்தல், அதற்கு உடந்தையாக இருத்தல் ஆகியன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாற்றுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.