அஸ்ஸாமில் இன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உல்ஃபா வெளியிட்டுள்ள மின்னஞ்சல் அறிக்கையில், அம்மாநிலத்தில் நடந்து வரும் அமைதிப் பேச்சுகளை குலைப்பதற்காக திட்டமிட்டு தொடர் குண்டுவெடிப்பை உல்ஃபா நடத்தியுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொடர் குண்டுவெடிப்பில் உல்ஃபா-வை குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல என்றாலும், கடந்த கால குண்டுவெடிப்புகளில் உல்ஃபா-வுக்கு உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே என அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்றைய தொடர் குண்டுவெடிப்பில் பெரும்பாலான குண்டுகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளிலேயே வைக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாதிகளின் குறி அதிகளவு மக்களின் உயிரை பலி வாங்குவதே என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், குண்டுவெடிப்பில் ஹுஜி பயங்கவாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இதுபோன்ற தாக்குதல்களின் போது அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை உல்ஃபா பயன்படுத்த மாட்டார்கள். எனவே இன்றைய தாக்குதலில் ஹுஜி அமைப்பினருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.