உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் மும்பையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 நபர்களை மும்பை ரயில்வே காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அரசு ரயில்வே காவல்துறை ஆணையர் ஏ.கே.ஷர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், உ.பி. இளைஞர் கொலை நேரில் பார்த்தவர்களிடம் நேற்று நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.
எனினும், இவர்கள் 5 பேரும் ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியைச் சேர்ந்தவர்களா என்பதைத் உறுதி செய்ய ஏ.கே.ஷர்மா மறுத்து விட்டார். அவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்தேவ் ராய் என்ற 25 வயது தொழிலாளர் செவ்வாய்க்கிழமை மதியம், மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.
படுகாயமடைந்த அவர் பத்லாபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அந்த கொலை தொடர்பாக இன்று 5 நபர்களை மும்பை அரசு ரயில்வே காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.