இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜீலங்கையில் உள்ள நிலவரங்களை விவாதிக்க விரைவில் கொழும்பு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக புது டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜக்பக்சவிடம் தொலைபேசியில் பேசியபோது இந்த முடிவு எட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அரசியல் தலைவர்களை சந்தித்து அங்குள்ள நிலவரங்களை அறிந்து கொள்ள முடிவு எட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் அதிபர் ராஜபக்சவுடன் தொலைபேசியுடன் உரையாடுகையில், ராணுவ நடவடிக்கை அப்பாவி தமிழர்களை ஒரு போதும் இலக்காக கொண்டிருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியதால், "ராணுவ நடவடிக்கை ஒரு போதும் அப்பாவி தமிழர்களுக்கு எதிராக திருப்பிவிடப்படாது" என்ற உறுதியை ராஜபக்ச அளித்துள்ளார்.
அதேபோல் போரினால் புலம் பெயர்ந்து, வீடு வாசல்களை இழந்து தவித்திடும் தமிழர்களின் மறு வாழ்விற்காக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ராஜபக்ச உறுதி அளித்துள்ளார்.
இலங்கை வடக்கு பகுதியில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டையில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனது தொலைபேசி உரையாடலில் கவலை தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அங்குள்ள நிலவரங்களை அறியவும், விவாதிக்கவும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.