பிரபல தென்னிந்திய நடிகை ஜெயசுதா, ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள ஜெயசுதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாண்டியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
சுமார் 225 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர், கடந்த 1975ஆம் ஆண்டு வெளியான லட்சுமண் ரேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தெலுங்கில் என்.டி.ராமராவ், நாகேசுவர ராவ், சோபன்பாபு, கிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர். தற்போது சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் 50 வயதான ஜெயசுதா அரசியலில் ஆர்வம் காட்டி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.சீனிவாஸ் முன்னிலையில், சால்வை அறிவித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். உறுப்பினர் விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெயசுதா எனது அரசியல் பணி மூலம் மக்களுக்கு சேவை செய்யவே காங்கிரசில் சேர்ந்து இருக்கிறேன். முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மக்கள் பணி பாராட்டுக்குரியது என்று கூறினார்.
'பிரஜா ராஜ்யம்' கட்சித் தலைவர் சிரஞ்சீவியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, அது போன்ற எண்ணம் இல்லை என்றார் ஜெயசுதா.