உத்திரப்பிரதேச மாநில ரேபரேலி பகுதியில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேரணி நடத்துவதற்கு ரேபரேலி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. அந்தப் பகுதியில் நிலவி வரும் சட்டம்,ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாளை சோனியா காந்தி லால்கஞ்ச் விவசாயிகள் முன்னிலையில் உரையாற்றவுள்ளார். மேலும் ரயில்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் பூமி பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் மாநில அரசு அந்த நில ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. அதாவது இந்த நில ஒதுக்கீட்டால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக வந்த செய்திகளை அடுத்து நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்த உத்தரவிற்கு தடை விதித்தது.
தற்போது அந்த மாவட்டத்தில் 144 தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அங்கு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.