தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் அவர்களைச் சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான தப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் படையினரின் சூட்டாதரவுடன் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் சிலர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹெல்லான் கிராமத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினரும், காவலர்களும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
தாங்கள் சுற்றி வளைக்கப்படுவதை அறிந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர். அவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோதல் நடத்து வரும் பகுதிக்குக் கூடுதல் படைகள் விரைந்துள்ளதாகவும், மோதல் பற்றிய தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.