நிலவிற்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் முதல் கனவுத் திட்டம்- சந்திராயன்-1 விண்கலம் அக்டோர் 22 இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
வானிலை அனுமதித்தால் காலை 6.20 மணிக்கு சந்திராயன்-1 விண்கலத்தைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி.- சி11 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் அகில இந்திய வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
ரூ.386 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தடைபட்டு வந்தது.
முன்னதாக, சந்திராயன்-1 விண்கலம் பெங்களூருவில் இருந்து சிறப்பு வாகனம் மூலமாக சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் கடற்கரை நகரமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே அனுப்பப்பட்டுவிட்டது.
பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் சந்திராயன்-1 விண்கலத்தைப் பொருத்தும் பணிகளை இந்த வார இறுதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ராக்கெட்டில் இந்தியாவிலிருந்து 5, அமெரிக்கா, ஐரோப்பா, பல்கேரியா ஆகிய நாடுகளிலிருந்து 6 ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த கருவிகளும் விணணிற்கு அனுப்பப்பட உள்ளன.