ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலாவது ரயில் போக்குவரத்தை, பிரதமர் மன்மோகன்சிங் வரும் 11 ஆம் தேதி ஸ்ரீநகரில் தொடங்கி வைக்கிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பது அம்மாநில மக்களின் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. இதையடுத்து இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இரண்டு நாள் பயண்மாக வரும் வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீருக்குச் செல்லும் பிரதமர் மன்மோகன்சிங், சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்ரீநர் நவுகான் - புத்காம் இடையிலான பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
இரு ரயில் நிலையங்கள் இடையிலான தொலைவு மிகக் குறைவு என்றபோதும், காஷ்மீர் மாநிலத்தின் முதலாவது ரயில் சேவை என்பதால், மக்கள் மகிழ்ச்சியுடன் இதை வரவேற்றுள்ளனர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று உதம்பூர் வரும் பிரதமர் மன்மோகன்சிங், தோடா மாவட்டத்தில் உள்ள 450 மெகாவாட் பாக்லிஹர் நீர்மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.