காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பினர் பேரணி நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றும் தொடர்கிறது. அம்மாநிலத்தின் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏராளமான காவல்துறையினரும், துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பழைய பாராமுல்லா நகரில் நேற்றிரவு ஏராளமானோர் ஒன்றாகத் திரண்டு கூச்சலிட்டது உள்ளிட்ட சில சிறிய நிகழ்வுகள் தவிர பள்ளத்தாக்கின் அனைத்து பகுதிகளிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பத்திரிகையாளர்கள், பத்திரிகை பணியாளர்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கும் “பாஸ்”களை அரசு வழங்க மறுத்ததைத் தொடர்ந்து நாளிதழ் பிரசுரம் செய்வதில்லை என பத்திரிகையாளர்கள் முடிவு செய்ததால், அம்மாநிலத்தில் அதிகம் விற்பனையாகும் “கிரேட்டர் காஷ்மீர்” உட்பட எந்த நாளிதழ்களும் இன்று விற்கப்படவில்லை.
ஆனால் ஜம்மு-காஷ்மீர் அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
காலவரையற்ற ஊரடங்கு மற்றும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கும் பாஸ்களை போதிய அளவு வழங்க அரசு மறுத்ததால் நாளிதழ் பிரசுரத்தை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், இதன் காரணமாகவே “கிரேட்டர் காஷ்மீர்” மற்றும் “காஷ்மீர் உஸ்மா” நாளிதழ்கள் இன்று விற்பனை செய்யப்படவில்லை என்றும் கிரேட்டர் காஷ்மீர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர், அனைத்து நாளிதழ்களுக்கும் போதுமான ஊரடங்கு விலக்கு “பாஸ்”கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பத்திரிகைகளுக்கு, அவர்களது ஊழியர்களை அழைத்து வருவதற்காக இயக்கப்படும் வாகனங்களுக்கும் “பாஸ்”கள் அளிக்கப்பட்டுள்ளன என்றார்.
பிரிவினைவாத அமைப்பினர் பேரணி நடத்துவதாக அறிவித்திருந்த லால்-சௌக் பகுதியில் ஏராளமான துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீநகருக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் வாங்கப்பட்ட நவீன கலவர எதிர்ப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் முக்கிய இடங்களிலும், முன்பு கலவரம் ஏற்பட்ட இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.