தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி மலர்ச் சந்தையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது!
நேற்று, மெஹ்ராலி மலர்ச் சந்தைப் பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து எலக்ட்ரானிக் பொருள் விற்பனை கடைக்கு முன் பிளாஸ்டிக் கவரில் ஒரு டிஃபன் பாக்ஸை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
13 வயதான சந்தோஷ் குமார் என்ற சிறுவன், அந்த டிஃபன் பாக்ஸை எடுத்துச்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் கொடுக்கச் சென்றபோது, டிஃபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அந்த இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 60 வயது முதியவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அடையாளம் தெரியாத மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜான் பேரா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மெஹ்ராலி மலர்ச் சந்தையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.