இராஷ்ட்ரிய சுய சஙகம் (ஆர்.எஸ்.எஸ்.) கோரிக்கைக்கிணங்க ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்முவைத் தனியாகவும், காஷ்மீரத்தைத் தனியாகவும் பிரிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இவ்வாறு கூறிய சோனியா காந்தி, பிரிவினைவாதிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவும் முடியாது என்று கூறியுள்ளார்.
“ஆர்.எஸ்.எஸ். கூறிவருவதுபோல ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட யோசனையை சந்தேகத்திற்கிடமின்றி நிராகரிக்கின்றேன். அதேநேரத்தில் பிரிவினைவாதிகளின் திட்டங்களுக்கு இணங்கவோ அல்லது அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளவோ முடியாது” என்று சோனியா பேசியுள்ளார்.
“ஜம்மு-காஷ்மீர் மக்களும் இந்தியாவின் அங்கமே என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். எந்த ஒரு சமூகமாகயினும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால், அதனை உணர்வுப்பூர்வமாக அணுகுவோம்” என்று கூறியுள்ள சோனியா காந்தி, அமர்நாத் கோயில் நில விவகாரத்தில் ஏற்பட்டுள்ள உடன்பாடு அங்கு அமைதியை உருவாக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.