காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து 7 ஆவது நாளாகக் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் சிறிது சிறிதாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிவினைவாத அமைப்புகள் நடத்தவிருந்த ஊர்வலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பின்னர் காலவரையற்று நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கை மீறிப் போராட்டங்கள் நடந்து வருவதால் பள்ளத்தாக்கு முழுவதும் பற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை முதல் பெரிய அளிவிலான ஊரடங்கு மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும், இயல்பு நிலை திரும்பி வரும் பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குல்காம், பட்காமில் இயல்பு நிலை!
ஒட்டுமொத்தமான முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வடக்கு காஷ்மீரில் உள்ள குல்காமில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அந்த மாவட்ட நீதிபதி லத்தீஃப்- யு ஜமான் அறிவித்துள்ளார்.
காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், பள்ளி, கல்லூரிகளைத் திறக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜமான், பொது மக்கள் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல பட்காம் மாவட்டம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு ஊரடங்கு தளர்த்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடல்!
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் தேர்வுகளும், நேர்முகத் தேர்வுகளும் செப்டம்பர் 6-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதேபோல இன்று நடப்பதாகவிருந்த அனைத்து ராணுவத் தேர்வுகளும் நாளைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.