சிங்கூரிலில் விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனம் நானோ ரக கார்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து வருகிறது. இதற்காக 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 400 ஏக்கர் விவசாயிகளிடம் இருந்து நிர்ப்பந்தமாக கையகப்படுத்தியுள்ளதாகவும், அதை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த தொழிற்சாலைக்கு முன்பு திரிணாமல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, விவசாயிகள், பெரும் திரளான கட்சி தொண்டர்களுடன் 24 ஆம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் 2 ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொல்கத்தாவுக்கும், ஹெவராவுக்கும் இடையே போக்குவரத்தும், புர்வான், பங்கூரா, வடக்கு 24 பர்கானா, தெற்கு 24 பர்கானா பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகள் உட்பட பல வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிற்கின்றன.
இதற்கு மாற்று பாதையான டெல்லி சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை கார் தொழிற்சாலை ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று சிங்கூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரியாபர்தா பக்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலையின் ஒரு வாசல் வழியாக மட்டும் தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கொல்கத்தாவில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.
இந்த நிலத்தை திரும்ப கொடுத்தால், நானோ கார் தொழிற்சாலை திட்டம் நின்று விடும். இது நடப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று பட்டாச்சார்யா கூறினார்.
இந்த போராட்டத்தை மேலும் விரிவு படுத்தும் வகையில் மம்தா பானர்ஜி, வருகின்ற 29 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தினசரி மதியம் 3 மணி முதல் 5 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.