ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. எம்.பி. பாபுபாய் கடாராவை பதவி நீக்க பரிந்துரைப்பதென்று மக்களவை உரிமைக்குழு ஒரு மனதாக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் ஒருவரையும், தன் மகனையும் தனது பாஸ்போர்டைப் பயன்படுத்தி அயல்நாட்டிற்கு கடத்த முயன்ற குற்றத்தின் பேரில் கடந்த ஏப்ரல், 2007 இல் கைது செய்யப்பட்ட பாபுபாய் கடாராவை, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மக்களவை உரிமைக் குவின் முன்பு ஆஜராகுமாறு மூன்று அல்லது நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டது.
தாஹட் தொகுதியைச் சேர்ந்த தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.யான கடாரா, நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டங்களில் முறையாகப் பங்கேற்றதுடன், நாடாளுமன்றச் சுற்றுப் பயணத்திலும் பங்கேற்றுவிட்டு, மக்களவை உரிமைக் குழுவின் சம்மனிற்கு மட்டும் பதில் தராமல் காலம் கடத்தி வந்தார்.
இதனால், கடாரா உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மக்களவை உரிமைக் குழு ஒருமனதாகத் தீர்மானித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
உரிமைக் குழு தனது பரிந்துரையை மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜிக்கு அனுப்பும் என்றும், அவர் அதை வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வைத்து விவாதித்து, நாடாளுமன்ற ஒப்புதல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.