நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பிறகு நாள் குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை அக்டோபர் 17ஆம் தேதி கூட்ட மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று மாலை டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை, அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதிவரை நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது என்று கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் வயலார் ரவி கூறினார்.
பிரதமரின் அமெரிக்கப் பயணத்தை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. சபையின் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். அதே நேரத்தில் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் தர அமெரிக்க நாடாளுமன்றமும் கூடும் நிலை உள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தள்ளிவைப்பது அமெரிக்காவின் வசதிக்காக செய்யப்படுவது என்றும், இது ஜனநாயகத்தை சிறுமைபடுத்தும் செயல் என்றும் இடதுசாரி கட்சிகள் குற்றம் சாற்றியுள்ளன.