மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை அருகில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்து வரும் காலவரையற்ற போராட்டத்தையடுத்து அங்கு பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியைச் சுற்றிலும் 2,000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டாடா மோட்டார்ஸ் நுழைவு வாயில், காவல் துறையினரால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. உயரமான கோபுரங்களில் இருந்தும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர்ப் பீச்சியடிக்கும் வாகனமும் தயாராக உள்ளது.
டாடா கார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி டாடா தொழிற்சாலை அருகில் இன்று நடக்க உள்ள கூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் உள்பட திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதற்கிடையே, மேற்குவங்க மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா போராட்டத்தை அமைதியாக நடத்துமாறும், இந்த பிரச்சினையில் உள்ள நெருக்கடியை நீக்கி சுமூகத் தீர்வு ஏற்பட மேலும் பேச்சு வார்த்தை நடத்த வருமாறும் திரிணாமுல் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தர்ணா போராட்டம் அமைதியாக நடைபெறும் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். இந்த போராட்டத்தின் காரணமாக சிங்கூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.