அணு வர்த்தகத்தை இந்தியா மேற்கொள்வது தொடர்பாக என்.எஸ்.சி. நாடுகள் அடுத்த மாதம் முக்கிய முடிவு எடுக்கவுள்ள நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அடுத்த வாரம் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு 'விலக்குடன் கூடிய அனுமதி' கோரி இந்தியா முன்வைத்த வரைவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுக் (என்.எஸ்.ஜி.) கூட்டம் முடிந்தது.
இந்நிலையில், அணு வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி கிடைப்பதில் உள்ள தேக்க நிலையை போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக, வரும் திங்கட்கிழமை அன்று சிவசங்கர் மேனன் வாஷிங்டன் செல்லவிருக்கிறார்.
தனது பயணத்தின் போது அமெரிக்கா வெளியுறவுச் செயலாளர் வில்லியம் பன்சோடு பேச்சு நடத்த உள்ளார்.செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ள என்.எஸ்.ஜி. கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய அணுகுமுறைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணு சக்தி ஒப்பந்த விவகாரம் மட்டுமின்றி, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் பங்கு உள்ளிட்ட இந்தியாவைச் சுற்றி நடைபெற்று வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், அமெரிக்காவுடன் சிவசங்கர் மேனன் விவாதிப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.