டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் (எய்ம்ஸ்) புதிய மருந்துகளை கொடுத்து சோதித்துப் பார்க்கப்பட்டதில் கடந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சுமார் 49 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை, 2 ஆயிரத்து 728 பேர் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட மொத்தம் 4 ஆயிரத்து 142 குழந்தைகள் புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதித்துப் பார்ப்பதற்காக பதிவு செய்யப்பட்டவர்கள் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் பற்றிய விவரங்களை தருமாறு, தன்னார்வ நிறுவனம் ஒன்று, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் எய்ம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
மொத்தம் 42 புதிய மருந்துகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டரை ஆண்டுகாலத்தில் 49 குழந்தைகள் இந்த பரிசோதனையில் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளில் 5 மருந்துகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிய வந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட குழந்தைகளில் 1.18 விழுக்காட்டினர் அதாவது 49 பேர் உயிரிழக்க நேரிட்டதாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பரிசோதனைகளை முறைப்படுத்த கொள்கை ஒன்று அவசியம் என்று மத்திய அரசை தாங்கள் வலியுறுத்தப் போவதாக தன்னார்வ அமைப்பின் நிர்வாகி தெரிவித்தார்.