குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிமி இயக்க தீவிரவாதிகள் உள்பட 8க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புத் தொடர்பாக இதுவரை 8க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டடுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்டவர்களின் விவரம் குறித்து நகர குற்றவியல் பிரிவு காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர் என்றும் இத்தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்றும் காவல் துறை இணை ஆணையர் ஆஷிஷ் பாட்டியா கூறினார்.
முன்னதாக தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த உடன், அப்துல் ஹலிம் என்பவன் கைது செய்யப்பட்டான். தற்போது அவன் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளான் என்றும் அவர் தெரிவித்தார்.
குற்றவாளிகள் குறித்து பொதுமக்கள் அளித்த சாட்சிகள், கூறிய அடையாளங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அகமதாபாத்தில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி 17 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 55 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.