ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் கிலானி, மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட பிரிவினைவாதத் தலைவர்கள் தொடர்ந்து அவரவர் வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹூரியத் மாநாட்டுக் கட்சிப் பேச்சாளர் அயாஸ் அக்பர் யு.என்.ஐ. செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதியில் இருந்து கிலானி அவரது ஹைடர்போரா வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிலானியின் வீட்டிற்கு முன்பு குவிக்கப்பட்ட காவலர்கள் சில மணி நேரங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டனர். இருந்தாலும், மசூதியில் சென்று தொழுவதற்குக் கூட கிலானிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதேபோல ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மற்றொரு தலைவரான முகமது அஷ்ரஃப் செராயீ- யும் அவரது வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இவற்றை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அக்பர் கூறினார்.
நேற்று மாலை முதல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர்கள் 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மிதவாத ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாஸ் மெளல்வி உமர் பரூக் அவரது நைஜீன் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சித் தலைவரும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான ஷபீர் அகமது ஷா தலைமறைவாகியுள்ளார். இவரைக் கைது செய்வதற்காகக் காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முன்னாள் தோட்டக்கலை அமைச்சர் முகமது திலாவர் மிர் நேற்றிரவு முதல் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் என்று யு.என்.ஐ. கூறுகிறது.
வேளாண் அமைச்சர் அப்துல் ஆஷிஸ் ஷர்காரும் துளசி பாக் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற முகமது திலாவர் மிர், தான் பாரமுல்லாவில் உள்ள தனது விருந்தினர் மாளிகையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.