காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தொடர்ந்து 8 ஆவது நாளாகப் பதற்றம் நிலவுகிறது. வடக்கு காஷ்மீரில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான லாரி ஓட்டுநர்கள், கிளீனர்களின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.
ஜம்மு- காஷ்மீரில் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, காஷ்மீர் பழ உற்பத்தியாளர்கள் சங்கம், ஹூரியத் மாநாட்டுக் கட்சி ஆகிய அமைப்புகள் விடுத்துள்ள போராட்ட அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பழ உற்பத்தியாளர்கள் சங்கம் விடுத்துள்ள போராட்ட அறிவிப்பினை முன்னிட்டு, ஆப்பிள் அதிகம் விளையும் சோப்பூர் நகரத்தில் நேற்றிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சோப்பூர் மண்டியில் இருந்து பாதுகாப்புப் படையினரின் உத்தரவை மீறி, முஷாஃபராபாத் நகரத்தில் நடக்கவுள்ள ஊர்வலத்திற்குத் தங்களது பழ லாரிகளை ஓட்டுநர்கள் எடுத்துச்செல்ல முயன்றனர். அவர்களுடன் மேலும் சிலரும் இணைந்து கொண்டனர்.
விடுதலை கோரும் முழக்கங்களையும், இந்துமத அடிப்படைவாதிகளுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பியபடி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
இதையடுத்து முதலில் தடியடி நடத்திய பாதுகாப்பு படையினர், அதற்குப் போராட்டக்காரர்கள் கட்டுப்படவில்லை என்பதால் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இதனால் மண்டி பகுதி முழுவதும் இன்று காலை கலவரம் போலக் காட்சியளித்தது.
லாரி ஓட்டுனர்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய முஸ்லிம் லீக் தலைவர் முஷ்டாக் உல்- இஸ்லாம், இஸ்லாமிக் ஸ்டூடன்ட் லீக் தலைவர் ஷகீல் அகமது பக்ஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
8- ஆவது நாளாகப் பதற்றம்!
ஜம்மு- காஷ்மீர் முழுவதும் இன்று 8 ஆவது நாளாகப் பதற்றம் நிலவுகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டக் கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களும் கூட மூடப்பட்டுள்ளன.
பாரமுல்லா, ஸ்ரீநகர், பூஞ்ச் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி உள்ளன. எங்கு பார்த்தாலும் பாதுகாப்புப் படை வாகனங்களும், துப்பாக்கி ஏந்திய படையினரும் மட்டுமே தென்படுகின்றனர் என்று யு.என்.ஐ. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் பங்குகள், வங்கிகள், ரேஷன் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வர வேண்டிய பழ லாரிகளுக்காக எல்லை நகரமான யூரியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் காத்திருக்கின்றனர்.
178 லாரி அத்தியாவசியப் பொருட்கள்!
ஜம்மு- காஷ்மீர் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய 600 க்கும் மேற்பட்ட லாரிகள் மாநில எல்லையில் காத்திருக்கின்றன. இதில் 178 லாரிகள் இன்று பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீநகருக்குக் கொண்டுவரப்பட்டன. இன்னும் 423 லாரிகள் கீழ் முண்டா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர் வந்துள்ளவற்றில் சுமார் 20 லாரிகளில், சமையல் எரிவாயு, அரிசி, மாவு, ஆடுகள், கோழிகள், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. இன்னும் 138 லாரிகளில் பழங்கள், காய்கறிகள், பிற பொருட்கள் உள்ளன.
இதேபோல மற்ற லாரிகளையும் காஷ்மீருக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.