புனித அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள புகழ்பெற்ற பனி லிங்கத்தைத் தரிசித்து வணங்க இன்று மேலும் 374 பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி முகாமில் இருந்து 19 பெண்கள், 174 சாதுக்கள் அடங்கிய இந்த 374 பக்தர்களும் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கிப் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து 9 பேருந்துகளில் புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு வனத்துறை நிலத்தை ஒதுக்கிய விவகாரத்தில், ஜம்முவில் நடந்து வரும் தொடர் போராட்டங்களின் காரணமாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது அமர்நாத் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
ஆகஸ்ட் மாத இறுதியில் யாத்திரைக் காலம் முடிவடைய உள்ளதால், புனித அமர்நாத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.