ஜூலை 22 இல் மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டி தங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் அளித்துள்ள பா.ஜ.க. எம்.பி.க்கள் மூவரும், வருகிற 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நாடாளுன்றக் குழு முடிவு செய்துள்ளது.
லஞ்சப் புகார் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள வி.கிஷோர் சந்திர தியோ எம்.பி. தலைமையிலான நாடாளுமன்றக் குழு இன்று கூடியது. இதில் 7ஆம் தேதி ஆஜராகும்படி பா.ஜ.க. எம்.பி.க்களுக்குச் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவைத் தலைவரிடம் சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சி அளித்துள்ள 5 வீடியா சிடிக்கள், 2 ஆடியோ சிடிக்கள் ஆகிய 7 சிடிக்களையும் முழுமையாகப் பார்வையிட்டதாக நாடாளுமன்றக் குழுவின் தலைவர் கிஷோர் சந்திர தியோ தெரிவித்தார்.
சிடிக்களைப் பார்வையிட்ட பிறகு, அவற்றின் பிரதிகளை குழுவின் செயலர் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
சிடிக்களில் உள்ள விவரங்கள் தெளிவாகவும், குற்றவாளிகளை அடையாளம் காணும்படியும் உள்ளதா என்பதைத் தெரிவிக்க மறுத்த தியோ, விசாரணை முடியும் முன்னர் தன்னால் எந்தத் தகவலையும் வெளியிட முடியாது என்றார்.