சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரித் தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இன்னும் பதில் மனுத் தாக்கல் செய்யாத முதல்வர் கருணாநிதி, மத்தியக் கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட 4 பேரை, நீதிமன்ற அவமதிப்பின் பேரில் கைது செய்ய உத்தரவிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்துத் தமிழகத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூறி அ.இ.அ.தி.மு.க. செயலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை உடனடியாக விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசிற்குக் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தைப் பாதியில் கைவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநிலப் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துச் செயலர் சாரங்கி, தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி, காவல்துறை இயக்குநர் ஆகிய 6 பேருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் தலைமைச் செயலரும், காவல்துறை இயக்குநரும் மட்டும் ஜூலை 30 ஆம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்தனர். மற்றவர்கள் தொடர்ந்து கால அவகாசம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் கொண்ட அமர்வு, நீதிமன்ற உத்தரவை அவமதித்தால் தமிழக முதல்வர் கருணாநிதிக்குக் கைது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தது.
விசாரணையின்போது கோபமடைந்த நீதிபதிகள், "நீங்கள் எல்லாம் என்ன மாதிரியான மனிதர்கள்? நீங்கள் என்ன சட்டத்திற்கும் மேலானவர்களா? நீங்கள் நீதிமன்றத்திற்கே உத்தரவிடுவீர்களா? நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ள முதல்வர் கருணாநிதி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, அவருக்குக் கைது உத்தரவு பிறப்பிப்போம்?" என்று எச்சரித்தனர்.
மேலும், இவ்வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யாத முதல்வர் கருணாநிதி, மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநிலப் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துச் செயலர் சாரங்கி ஆகிய 4 பேரும் இன்னும் 4 வாரத்திற்குள் தங்களது பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதுவே நீதிமன்றம் வழங்கும் கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் முதல்வர் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவுக்கு ஒரு வார கால அவகாசம் தரப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து இந்த வழக்கை செப்டம்பர் 22 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம், பதில் மனுத் தாக்கல் செய்ய ஏற்பட்ட காலதாமதம் குறித்து விளக்கமளிக்குமாறும் குற்றம்சாற்றப்பட்ட 6 பேருக்கும் உத்தரவிட்டுள்ளது.