மேற்கு வங்க மாநிலம் பாரகன் மாவட்டத்தில் முஸ்லிம் பெண் ஒருவரை மணந்த வாலிபர் உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்டார். பலத்த தீக்காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்ணை மணந்த வாலிபரை சிலர், தலையை துண்டித்து கொலை செய்தனர்.
இப்போது மீண்டும் அதே போன்ற பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாரகன் மாவட்டம் அனர்புர் கிராமத்தை சேர்ந்தவர் அர்காப் பானர்ஜி.
இந்து மதத்தை சேர்ந்த இவர், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரெகானா என்ற பெண்ணை காதலித்தார். இதற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் எதிப்பை மீறி அர்காப் - ரெகானா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் வேறு ஊரில் தங்கி இருந்தனர். இது மனைவி குடும்பத்தினருக்கு தெரியாது. இந்த நிலையில் ரெகானாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு இவர்கள் தங்கி இருந்த இடத்தை ரெகானா குடும்பத்தினர் கண்டு பிடித்தனர். அவர்கள் ரெகானாவையும், குழந்தையையும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டனர்.
இதனால் அர்காபானர்ஜி ரெகானா வீட்டுக்கு சென்று எனது மனைவியையும், குழந்தையையும் என்னோடு அனுப்புங்கள் என்று கேட்டார். அப்போது ரெகானாவின் சகோதரர்கள் அவரை அடித்து உதைத்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்தனர்.
அர்காபானர்ஜி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.