சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து மீறுவதன் மூலம் இரு நாட்டு உறவுகளில் பதற்றத்தை உண்டாக்க வேண்டாம் என்று இந்தியா எச்சரித்துள்ள நிலையில், காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு அரண் மீது பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
"காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா மாவட்டம், யூரி பிரிவில் உள்ள 12 பிரிகேட் பகுதியில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு அரண் மீது நேற்றுப் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்" என்று பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய ரக பீரங்கி மூலம் 15 முதல் 16 முறை பாகிஸ்தான் படையினர் சுட்டதாகவும், இதற்கு இந்தியப் படையினர் எந்த எதிர்த் தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.
"பாகிஸ்தான் நடத்தியுள்ள தாக்குதல் சண்டை நிறுத்த ஒப்பந்த மீறலா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்புவதற்காக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம்" இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து மீறுவதன் மூலம் இரு நாட்டு உறவுகளில் பதற்றத்தை உண்டாக்க வேண்டாம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.