Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜம்முவில் பதற்றம்: ராணுவம் குவிப்பு!

ஜம்முவில் பதற்றம்: ராணுவம் குவிப்பு!
, சனி, 2 ஆகஸ்ட் 2008 (11:28 IST)
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்கிய விவகாரத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளதால், அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை தொடர்வதுடன் நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறைக்கு சொந்தமான இடத்தை அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கிய உத்தரவை அம்மாநில அரசு திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மீண்டும் அமைதி திரும்பியது.

கடந்த சில நாட்களாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், நேற்று அமர்நாத் யாத்ரா சங்கார்ஷ் சமிதி சார்பில் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து ஜம்மு, சம்பா மாவட்டங்களில் நேற்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், சம்பா மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றிரவு தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil