டெல்லியை அடுத்த நொய்டாவில் மாணவி ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜூம் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3-வது நபராக கைது செய்யப்பட்டுள்ள விஜய் மண்டலுக்கு 3 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது.
காஸியாபாத்தில் மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுமதியளித்து நீதிபதி சப்னா மிஸ்ரா உத்தரவிட்டார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் மண்டலிடம் நடத்தப்பட்ட சோதனை அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மற்றவர்களின் அறிக்கைகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் சிபிஐ வழக்கறிஞர் சுரேஷ் பத்ரா தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள கிருஷ்ணா, ராஜ்குமாருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு சிபிஐ அதிகாரிகள் வற்புறுத்துவதாக மண்டல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பான மனு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால், அதுவரை நீதிமன்றக் காவலில் அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
விஜய் மண்டலுக்கு எதிராக எந்தவித ஆதாரங்களையும், சிபிஐ அளிக்க முடியவில்லை என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலையில், ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை முதலில் நொய்டா காவல்துறை விசாரணை செய்தது. பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது.
பல் மருத்துவரான ராஜேஷ் தல்வாரிடம் உதவியாளராக (கம்பவுண்டராக) பணியாற்றிய கிருஷ்ணா, ராஜேஷ் தல்வாருடன் இணைந்து பல் மருத்துவமனை நடத்திய துரானியின் வீட்டு வேலைக்காரர் ராஜ்குமார் ஆகிய இருவரும் ஏற்கனவே கைதாகி சிபிஐ காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.