இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித தடையுமற்ற ஒப்புதல் அளிக்குமாறு அணு சக்தித் தொழில்நுட்ப வணிக்க் குழு (Nuclear Suppliers’ Group-NSG) வுடன் பேசி வருவதாக அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் கூறியுள்ளார்.
டெல்லி வந்துள்ள பாக்கிஸ்தான் அயலுறவுச் செயலருடன் இந்திய-பாக்கிஸ்தான் உறவை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பான 5வது சுற்றுப் பேச்சிற்குப் பிறகு அவருடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களிடம் பேசியபோது மேனன் இதனைத் தெரிவித்தார்.
“அணு சக்தித் தொழில்நுட்ப வணிகக் குழுவுடன் பேசிவருகிறோம், உலக நாடுகளுடன் முழு அளவிற்கு அணு சக்தித் தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ளவதற்கு ஏற்ற வகையில் எவ்வித நிபந்தனையுமற்ற விலக்கைத் தரவேண்டும் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று மேனன் கூறினார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுவது தொடர்பாக பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) ஆளுநர்கள் எழுப்பிருந்த கேள்விகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியாவின் சார்பாக அதற்கெல்லாம் பதிலளிக்கப்பட்டுள்ளது என்று மேனன் கூறினார்.
அணு சக்தித் தொழில்நுட்ப வணிக்க் குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியிடமும் தனித்தனியாக பேசிவருதாகவும் மேனன் தெரிவித்தார்.