ஜம்மு- காஷ்மீரில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.
சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த முதல்வர் குலாம் நபி ஆசாத், தான் பதவி விலகப் போவதாக அவையில் அறிவித்தார்.
முன்னதாக, தான் பதவி விலகப் போவதால் நம்பிக்கை வாக்கெடுப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் குலாம் நபி ஆசாத் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குதிரை பேரத்தைத் தடுப்பதற்காகவே தான் இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெரிவித்தார் ஆசாத்.
அமர்நாத் கோவில் வாரியத்திற்கு நிலம் வழங்கிய விவகாரத்தில், சட்டப் பேரவையில் 17 உறுப்பினர்களைக் கொண்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி, அரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது.
இதனால் 21 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஜூலை 7-இல் (இன்று) சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க வேண்டும் என்று ஆளுநர் என்.என். வோஹ்ரா கூறியிருந்தார்.
ஜம்மு- காஷ்மீரில் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 24 உறுப்பினர்களும், சிறுத்தைகள் கட்சிக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும் 16 எம்.எல்.ஏ.க்கள் சுயேட்சைகளாவர்.
வருகிற அக்டோபர் மாதம் ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.