அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கப்படுமானால், மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை எப்போது விலக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை முடிவு செய்வதற்காக இடதுசாரிகள் நாளை கூடுகின்றனர்.
புது டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், "பன்னாட்டு அணு சக்தி முகமை ஆளுநர்கள் குழுவிடம் அரசு எப்போது பேச்சு நடத்தப் போகிறது என்று நாளை அரசிடம் கேட்கப் போகிறோம். அவர்கள் போகிறார்களா என்பதெல்லாம் பிரச்சனை இல்லை. அவர்கள் போனால், அதற்குப் பிறகு கேள்வி இல்லை" என்றார்.
"அணு சக்தி ஒப்பந்தம் செயல்படுத்தப்படுமானால் அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வது என்பதில் இடதுசாரிகளுக்கு இருவேறு கருத்துக்கள் இல்லை.... ஆதரவை விலக்கிக்கொள்வது குறித்து குடியரசுத் தலைவருக்கு எழுதப்படும் கடிதம் உள்ளிட்ட விடயங்கள் பற்றி நாளை முடிவு செய்யப்படும்" என்றார் பரதன்.
பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் அரசு எப்போது செல்லும் என்பது பற்றி இடதுசாரிகளுக்கு ஏதாவது அறிகுறிகள் தெரிந்துள்ளதா என்று கேட்டதற்கு, "அரசு அவசரப்படுகிறது. பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் செல்வதானால் இந்த வாரத்திற்கு உள்ளாகவோ.... அடுத்த ஏழு, எட்டு அல்லது பத்து நாட்களிலோ அரசு முடிவு செய்யலாம்" என்றார்.
மன்மோகன் சிங் ஜி-8 மாநாட்டிற்குச் சென்று வந்த பிறகு ஆதரவை விலக்கிக் கொள்ளலாம் என்று இடதுசாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது பற்றிக் கேட்டதற்கு, அரசு பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் எப்போது செல்கிறதோ அப்போது ஆதரவை விலக்குவோம். அரசு நாளை சென்றால், நாளையே விலக்குவோம். மன்மோகன் திரும்பிய பிறகு சென்றால் அப்போது விலக்குவோம் என்றார் பரதன்.