அமர்நாத் கோவில் வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப் பெற்றது தொடர்பாக ஜம்மு- காஷ்மீரில் இன்று பல்வேறு இடங்களில் நடந்த கலவரத்தில் 15 காவலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஊரடங்கு உத்தரவை மீறிப் போராட்டத்திலும், வன்முறைகளிலும் ஈடுபட்டதுடன், காவலர்களுடன் மோதியதற்காகப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 110 பேர் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பன.
லகான்பூர் நகரத்தில் சுமார் 5,000 போராட்டக்காரர்கள் காவல்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு, அங்கிருந்த காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக கண்ணீப் புகை குண்டுகளை வீசிய காவலர்கள், அது பயனளிக்காததால் தடியடி நடத்தினர்.
கத்துவா மாவட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 10 காவலர்கள் காயமடைந்துள்ளனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலம் நடத்த முயன்ற சுமார் 6,000 பேரைக் காவலர்கள் தடியடி நடத்திக் கலைந்து போகச் செய்தனர்.