இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்ததத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று நடந்த ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இறுதி முடிவு எடுக்காமலேயே கலைந்தது.
தலைநகர் டெல்லியில் சற்று முன் நடந்து முடிந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சீத்தாராம் யச்சூரியும், “இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மீதான ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவு அடுத்த கூட்டத்தில் இறுதி செய்யப்படும்” என்று அறிவித்தனர்.
“இன்று நடந்த ஐ.மு.-இடதுசாரி கூட்டணிகளின் 9வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அனைத்து பரிமாணங்களும் முழுமையாக ஆராயப்பட்டது. அடுத்த கூட்டத்தில் ஒப்பந்தத்தின் மீதான குழுவின் முடிவு இறுதி செய்யப்படும்”என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
இதன்பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதில் கூறாமல் அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து சென்றுவிட்டார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்ததை நிறைவேற்றுவதற்கான முதல் நடவடிக்கையாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் கண்காணிப்பு உடன்படிக்கையை இறுதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆளும் கூட்டணியின் கோரிக்கையை இடதுசாரிகள் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இறுதி முடிவு தள்ளிப்போடப்பட்டுள்ளது.
ஐ.மு.-இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னர் இரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவும், அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பிரதமரைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான இறுதி முடிவை இதற்கு மேலும் தாமதிக்கத் தான் விரும்பவில்லை என்று அவர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் 8ஆம் தேதி ஜப்பானில் நடைபெறும் ஜி8 மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். இம்மாநாட்டிற்கிடையே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐ பிரதமர் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பில் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்த இறுதி முடிவை தெரிவித்திட பிரதமர் விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
எனவே அம்மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.