பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு குறைந்தபட்ச விலை, அதிக பட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டது.
சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள், பயன்படுத்தும் நாடுகளுக்கு இடையேயான கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால், பணவீக்கம் அதிகரிக்கிறது. ஊகவணிகத்தில் ஈடுபடுபவர்கள் விலை உயர்த்துவதை தடுக்க கச்சா எண்ணெய்க்கு குறைந்த பட்ச விலை, அதிக பட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்.
எண்ணெய் விலை உயர்வை தடுக்க, இதனை உற்பத்தி செய்யும் நாடுகள் தேவையான அளவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்.
எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும், பயன் படுத்தும் நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்பட வேண்டும். இதன் படி கச்சா எண்ணெய் விலை குறிப்பிட்ட அளவிற்கும் கீழ் குறையாது என்பதை பயன்படுத்தும் நாடுகள் உறுதி செய்ய வேண்டும். அதே போல் உற்பத்தி நாடுகள் குறிப்பிட்ட விலையை விட அதிகரிக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதன் குறைந்த பட்ச விலையும், அதிக பட்ச விலையும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த விலைகளின் அடிப்படையில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும்.
இந்த முறையால் மட்டுமே எண்ணெயின் விலை எதிர்பாராத அளவு உயர்வதையும், அடிக்கடி மாற்றம் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக பொருளாதாரம் வளர்ச்சி குறைந்தாலும் அல்லது நெருக்கடி ஏற்பட்டால், அது எண்ணெய் உற்பத்தி நாடுகளையும் பாதிக்கும். இப்போதுள்ள விலை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கோ அல்லது பயன்படுத்தும் நாடுகளுக்கோ நன்மை ஏற்படுத்துவதாக இல்லை என்று கூறினார்.
ஜெட்டாவில் நடந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோராவும் கலந்து கொண்டனர்.