கடந்த பதின்மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 11.05 விழுக்காடு உயர்ந்திருப்பது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கை, செயல்பாடுகள், திட்டங்கள் தோல்வி அடைந்திருப்பதையே காண்பிக்கிறது என்று நாடாளுமன்றத்தின் எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவித்கர் கூறுகையில், பணவீக்கம் 8.75 விழுக்காட்டில் இருந்து, இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது. இது மத்திய அரசு விலைவாசி உயர்வதையும், பணவீக்கம் அதிகரிப்பதையும் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் திண்டாடுவதையே எடுத்துக் காட்டுகிறது.
அரசு உபரியாக இருந்த பொருளாதாரத்தை, பற்றாக்குறையுள்ள பொருளாதாரமாக மாற்றி விட்டது. சமையல் எரிவாயு, உரம், மண்ணெண்ணெய் உட்பட எல்லா அத்தியாவசிய பொருட்களும் பற்றாக்குறையாக உள்ளது. இது கருப்பு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நாட்டை மீண்டும் பற்றாக்குறை, கருப்பு சந்தை என்ற பழைய நிலைமைக்கு கொண்டு சென்று விட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக மாறிவிட்டது. இதற்கு காரணம் அரசு எண்ணெய் வித்துக்களை பயிரிடும் விவசாயிகளுக்கு எவ்வித ஊக்கத்தொகையும் வழங்ககாததே.
மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சிமெண்ட், உருக்கு உற்பத்தியாளர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு செயற்கையாக விலையை உயர்த்துவதாக பேச்சளவில் மட்டுமே கூறிவருகின்றார் ஆனால் இந்த கூட்டணியை உடைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. விலைகளை கண்காணிக்கும் அமைப்பையே செயல்படாமல் செய்து விட்டது இந்த அரசு என்று பிரகாஷ் ஜவித்கர் கூறினார்.