சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இதுவரை எட்டாத அளவிற்கு மீண்டும் உயர்ந்துள்ளது.
மே 22 ஆம் தேதி பீப்பாய் ஓன்றிற்கு 135 டாலர்களாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, அதன் பிறகு தொடர்ந்து குறைந்து 128 டாலர்களாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 10.75 டாலர்கள் அதிகரித்து 139.12 டாலர்களாக அதிகரித்தது.
யூரோவிற்கு நிகரான டாலரின் மதிப்பில் ஏற்பட்ட சரிவும், அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலையின்மைப் பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தமும், முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் வணிகத்தில் அதிகமாக மூதலீடு செய்ததும் இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விலையேற்றம், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா விலையையும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட கடந்த 4 ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு உயர்த்தியது.
அந்த நாளில் இந்தியா இறக்குமதி செய்யும் ஓமன்-துபாய் கச்சா விலை பீப்பாய்க்கு 113 டாலர்களாகவும், பிரண்ட் கச்சா விலை 123 டாலர்களாகவும் இருந்தது.
வியாழக்கிழமை நிலவரப்படி, இவ்விரு கச்சா எண்ணெய் விலைகளின் கூட்டு சராசரி விலை பீப்பாய்க்கு 119 டாலர்களாக உள்ளது. சர்வதேசச் சந்தையில் லைட், சுவீட் மற்றும் பிரண்ட் வகை கச்சா பொருட்களின் விலை பீப்பாய்க்கு 139 டாலர்களாக அதிகரித்துள்ளதால், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா விலைகளும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலை நீடித்தால் கச்சா விலை இன்னும் ஒரு மாத காலத்தில் 150 டாலர்கள் அளவிற்கு உயரும் சாத்தியம் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.