கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்காகச் சுயேட்சைகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடகச் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 110 இடங்களில் வெற்றிபெற்றது.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 எம்.எல்.ஏ. -க்களின் ஆதரவு தேவை என்பதால், மீதமுள்ள 3 எம்.எல்.ஏ.- க்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், தங்களால் சில சுயேட்சை எம்.எல்.ஏ.- க்களின் ஆதரவைப் பெற முடியும் என்று பா.ஜ.க. வின் மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
"நாங்கள் சில சுயேட்சைகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம். சரியான நேரத்தில் அவர்களின் விவரங்களை வெளியிடுவோம்" என்றார் அவர்.
கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தல் வரலாற்றிலேயே இம்முறைதான் மிகக் குறைவான எண்ணிக்கையில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர்.
வெற்றிபெற்றுள்ள 6 சுயேட்சைகளில் 4 பேர் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள், ஒருவர் பா.ஜ.க. அதிருப்தி வேட்பாளர், மற்றொருவர் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் அதிருப்தி வேட்பாளர் ஆவர்.
மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.- க்களின் ஆதரவைப் பெற்ற பிறகுதான் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பா ஆளுநர் ராமேஸ்வர் தாகூரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.