ராஜஸ்தானில் போராடும் குஜ்ஜார் இனத்தவர் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராடும் மக்களின் பிரச்சனையை, ராஜஸ்தானில் ஆளும் பா.ஜ.க. அரசு அரசியலாக்குவதாக அக்கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியச் செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், "பழங்குடியினத்தவரை ஒருபுறமும், குஜ்ஜார் இனத்தவரை ஒருபுறமும் வைத்து அரசியல் விளையாட்டு நடத்திவரும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. அரசுதான் கலவரத்திற்கு முழுப் பொறுப்பு" என்று கூறப்பட்டுள்ளது.
குஜ்ஜார் இனத்தவரின் பிரச்சனை பேச்சின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.