புவனேஷ்வர்: ஒரிசாவில் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வரும் நிலையிலும் உலக வங்கி அம்மாநில அரசின் சுகாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது.
ஒரிசா மாநிலத்தின் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக உலக வங்கி ரூ.308 கோடி நிதி உதவி அளித்துள்ளதாகவும், இந்த தொகையைக் கையாள்வதில் 2005ஆம் ஆண்டு சில முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் உலக வங்கி பிரதிநிதி ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநிலம் ஒரிசாவே என்று ஆய்வறிக்கை கூறியதன் அடிப்படையில் உலக வங்கி அம்மாநிலத்தில் சாலை அமைத்தல், குடிநீர் வசதி, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கிராமப்புற மேம்பாடு ஆகிய திட்டங்களுக்காக நிதி ஆதரவு அளிக்க முடிவு செய்திருந்தது.
இந்த புதிய திட்டங்களுக்காக மேலும் ரூ.172 கோடி நிதி அளிக்கிறது உலக வங்கி. ஆனால் இந்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு அக்கறை காட்டாவிட்டால் நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.