அக்னி- 3 ஏவுகணைச் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்ல - கண்டம் விட்டு கண்டம் பாயும் - ஏவுகணையைச் சோதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டுள்ள மிகச்சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து விடும்.
அக்னி வரிசையில் அடுத்தகட்ட ஏவுகணைத் தயாரிப்பு இறுதி நிலையில் உள்ளதாகவும், 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்ல இந்த ஏவுகணை அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் சோதிக்கப்படும் என்றும் அக்னி-3 திட்ட இயக்குநர் அவினாஷ் சந்தர் தெரிவித்தார்.
5,000 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் ஏவுகணையின் என்ஜின், அக்னி-3 ஏவுகணையின் மூன்றாவது கட்ட என்ஜினை திட எரிபொருள் உந்து சக்தியில் இயங்கும்படி மாற்றியமைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது.
நீண்ட தூர அக்னி ஏவுகணைகளுடன், நீர்மூழ்கியில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை உள்ளிட்ட சிறப்புக் கடல் ஏவுகணைகளையும் சோதிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இடைமறித்துத் தாக்கும் ஏவுகணையின் இரண்டாவது சோதனை வருகிற செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பணிகளில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பா.ஆ.மே.க. தலைமை இயக்குநர் எம்.நடராஜன், இந்தியா எப்போது தனது முதல் அணு நீர்மூழ்கியைத் தயாரிக்கும் என்பதைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.